இந்திய தூதரங்கங்கத்தின் மீது தாலிபான்களின் அட்டூழியம்
வெளிநாட்டினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதை தடுக்கமாட்டோம் என தாலிபான்கள் உறுதியளித்த நிலையில் இந்திய துணை தூதரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் ஆட்சியமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாலிபான்கள் தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டால் பெண்கள் சுதந்திரம் பாதிக்கப்படும், வெளிநாட்டினர் அச்சுறுத்தப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் கவலையடைந்துள்ளது.
ஆனால், நாங்கள் கடந்த முறை ஆட்சி செய்ததுபோன்று ஆட்சி செய்யமாட்டோம், பெண்களுக்கு இஸ்லாம் அடிப்படையிலான உரிமைகள் வழங்கப்படும். வெளிநாட்டினர் பயமின்றி வெளியேறலாம். யாரையும் அச்சுறுத்தமாட்டோம். வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்களின் முக்கியமான குறிக்கோள் ஆகும், அனைவருக்கும் பொது மன்னிப்பு என தலிபான்கள் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கந்தகார், ஹெரத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நுழைந்து அங்குள்ள ஆவணங்களை தேடிப்பார்த்துள்ளனர். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
தாலிபான்களின் கத்தார் அலுவலகத்தில் இருந்து தூதரகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என இந்திய அரசுக்கு உறுதி அளிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் தாலிபான்கள் உறுதியை நம்ப முடியாது. 20 வருடத்திற்கு முன்பு இருந்த தலிபான் அரசுதான் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
காபூல் நகரை தாலிபான்கன் பிடித்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் உடனடியாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் நாடு திரும்ப முடியாமல் ஆப்கானிஸ்தானில் தவித்து வருகிறார்கள்.