மக்கள், அரசை முடக்கியுள்ளனர் : உபுல் ஜோசப் பெர்னாண்டோ
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரத்தினபுரியில் வெள்ளம் போடத் தொடங்கி, மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகப் போவது தெரிந்தது.
பிரேமதாச அந்த விடயத்தை அறிந்தவுடன் , அவர் களுத்துறை அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டார்.
24 மணி நேரத்திற்குள் அப் பகுதி மக்களையும் இணைத்துக் கொண்டு , களுத்துறையிலுள்ள முகத்துவாரத்தின் வாயை அகலப்படுத்துமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டார் பிரேமதாச.
இரத்தினபுரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு , ஜனாதிபதி பிரேமதாச , களுத்துறை முகத்துவாரத்தை அகலப்படுத்தச் சொல்வது எந்த அளவு பைத்தியக்காரத்தனமானது என்று கூறிக் கொண்டே , அரசாங்க அதிபர் களுத்துறை முகத்துவாரத்தின் வாயை அகலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாலை 3 மணியளவில், பிரேமதாச மீண்டும் அரசாங்க அதிபரை அழைத்தார்.
“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” பிரேமதாசா .
“நான் களுத்துறை முகத்துவாரத்தின் வாயை அகலப்படுத்தி விரிவுபடுத்துவதில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்,” என அரச அதிபர் கூறினார்.
“மிகவும் நல்லது. அதிக நேரம் இல்லை. அதை விரைவில் முடிக்க வேண்டும், ” என்றார் பிரேமதாசா.
இரத்தினபுரி வெள்ளம் குறையும் போது , களு கங்கையினூடாக களுத்துறைக்கு அந்த வெள்ளம் வரும் என்று தெரிந்தனால்தான் , இரத்தினபுரி முகத்துவாரத்தை அகலப்படுத்துமாறு பிரேமதாச கூறியிருந்தார். அந்த வெள்ளம் களுத்துறையினூடாக வழிந்து வெளியேறாது போனால் களுத்துறையும் பாதிக்கும் என பிரேமதாச உணர்ந்திருந்தார்.
இரத்தினபுரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இரத்தினபுரி அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்ட அதேவேளை, களுத்துறை வெள்ளத்தை தடுக்க களுத்துறை அரசாங்க அதிபருக்கும் உத்தரவிட்டார். பின்னர்தான் களுத்துறை அரசாங்க அதிபர் பிரேமதாச எதற்காக இப்படி செய்தார் என்பதை உணர்ந்தார்.
பிரேமதாஸ இப்படியான விஷயங்களை தன் அனுபவத்தினூடாக செய்தார்.
கோட்டாபவுக்கு வாக்களித்த 69 லட்சம் பேர் கோட்டாவிடம் இருந்து இப்படியான விடயங்களை எதிர்பார்க்கவில்லை. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கோட்டா விளையாடுவார் என அவர்கள் நினைத்தார்கள்.
அவர்கள் கோட்டாவுக்கு 69 லட்சம் வாக்குகளை மட்டுமின்றி , மூன்றில் இரண்டை கொடுத்தது, கோட்டா தான் நினைத்ததை நாட்டுக்கு செய்ய விட வேண்டும் என எண்ணினர்.
பாரம்பரிய கொழும்பு அரசியல்வாதிகளான ,விமல் உதய கம்மன்பில ஆகியோரை தலை தூக்க விடாது , சரத் வீரசேகரவை முதலமவராக வெற்றி பெற வைத்ததே, வீரசேகர கோட்டாவின் ஆள், அவரையும் பயன்படுத்தி கோட்டா விரும்பியபடி வேலை செய்யட்டும் எனும் நினைப்புகளோடுதான்.
நாலக கொடஹேவா போன்ற வியத்மகவில் இருந்த ஒருவரை கொண்டு வந்து கம்பஹாவில் பாரம்பரிய அரசியல்வாதியான பிரசன்ன ரணதுங்கவை இரண்டாம் இடத்துக்கு தள்ளியதும் கோட்டாவுக்கு இவர்கள் பலமாக இருப்பார்கள் என்பதால்தான்.
“அப்படி நினைத்த மனிதர்கள் இப்போது எதற்காக கடைகளை மூடுகிறார்கள்?”
இலங்கையின் அரசியல் வரலாற்றின் கடைகளை மூடி , நாட்டை முடக்க எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவை தோல்விகளாகவே முடிந்து உள்ளன.
இரண்டு அமைப்புகள் மட்டுமே இந்த நாட்டில் தமது பலத்தை பயன்படுத்தி கடைகளை மூடி, நாட்டை பாழ் படுத்தினார்கள்.
அது, ஜேவிபி மற்றும் புலிகள்.அமைப்புகளாகும்.
ஜேவிபி கடைகளை மூட , டி – 56 துப்பாக்கிகளை காட்டியும் , துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் மக்களை மிரட்டியும் நாட்டை முடக்கினார்கள்.
வடக்கில் குண்டுகளை வீசி, புலிகள் கடைகளை மூடினார்கள்.
ஆனால் இலங்கையில் உள்ள எந்தவொரு ஜனநாயக எதிர்க்கட்சிகளாலும் இதுபோன்ற மந்திரங்களை முழுமையாக செய்ய முடியாது.
1948 முதல் இன்றுவரை, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்த்து கடைகளை மூடி பந்துகளை செய்ய வேண்டும் என்று கோரி உள்ளன.
ஆனால் எல்லா கடைக்காரர்களும் அவர்களது பேச்சைக் கேட்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் மீதிருந்த பயம். தாங்கள் கடைகளை மூடினால், அந்த பகுதியில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் நகர சபைகளூடாக பழி வாங்குவார்கள் என அவர்கள் அஞ்சினார்கள்.
“அப்படியானால் இன்று இலங்கையின் வலிமையான இராணுவத்திலிருந்து வந்த ஜனாதிபதிக்கு பயப்படாமல் நகரங்களும் , கிராமங்களும் எப்படி மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன?”
அது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.
மக்கள் அரசாங்கத்தை நம்பவில்லை என்று மட்டும் அதனால் அர்த்தப்படவில்லை. அரசுக்கு மக்கள் பயப்படவும் இல்லை என்பதோடு , அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பையும் கடைகளை மூடுவதன் மூலம் உணர்த்தியுள்ளார்கள்.
2019 ஜனாதிபதித் தேர்தலில், கோட்டா தங்களது மீட்பர் என்று கருதியே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மத்திய வங்கி கொள்ளை, ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் ஜனாதிபதி (மைத்திரி) மற்றும் பிரதமருக்கு (ரணில்) இடையிலான மோதல் ஆகியவற்றால் சோர்வடைந்திருந்த மக்கள் கோட்டாவைச் சுற்றிக் கூடினர்.
2020 பொதுத் தேர்தலிலும் அவர்கள் கோட்டா கொரோனாவை ஒழிப்பார் என நினைத்து கோட்டாவுக்கு மூன்றில் இரண்டை பெற வாக்களித்தனர்.
2020 தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்கம் பயன்படுத்திய கோஷம், கொரோனாவை ஒழிப்போம் என்பதாகும்.
கோட்டா உட்பட ராஜபக்ச குடும்பம் கொரோனாவை ஒழித்ததாக , அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் கூறியபோது, உலகின் சக்திவாய்ந்த நாடுகளைப் பார்த்து சிரித்துக்கொண்டே, மக்கள் முண்டியடித்துக் கொண்டு , மொட்டுக்கு வாக்களித்தனர்.
பெரும் பயங்கரவாத்தை வென்ற எமக்கு கொரோனா பெரிதா என சொன்னதையெல்லாம் , மக்கள் நம்பினர்.
அதன் பலனாக மொட்டுக் கட்சி அபார வெற்றியை பெற்றது.
இனி எம்.பி.க்களாக வரவே முடியாத வேட்பாளர்கள் அந்த அலையில் சென்று புதிதாக எம்.பிகளாக தேர்வாகினர்.
மொட்டுக் கட்சிக்கு வாக்களித்த மக்கள் , கொரோனா காலத்தில் நாடு மூடப்பட்டதால் இழந்து போன வருவாய் மற்றும் வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருந்தனர்.
இலங்கையை கொரோனா இல்லாத நாடாகக் கருதி, சக்திவாய்ந்த நாடுகளில் இருந்து பணக்கார சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று அரசும், அரச ஊடகங்களும் , தனியார் ஊடகங்களும் செய்த பிரசாரங்களை, மக்கள் அப்படியே நம்பினார்கள்.
அதிக நாள் செல்லவில்லை. பிராண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடங்கியது.
உக்ரேனிய சுற்றுலா கூட்டம் வரத் தொடங்கியதிலிருந்தும் கொவிட் கொத்தணி பரவியது.
மீன்பிடி கொவிட் கொத்தணியும் நாட்டை அதிர வைத்தது.
பிராண்டிக்ஸ் கம்பனியின் வெளிநாட்டு (இந்தியாவிலிருந்த ) ஊழியர்களை தனிமைப்படுத்தாமல் , நேரடியாக நாட்டுக்குள் அனுமதித்தமையால் பிராண்டிக்ஸ் கிளஸ்டர் தொடங்கியது என்பதை மக்கள் உணர்ந்தனர்.
உக்ரேனிய சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தப்படுத்தாமல் நாட்டுக்குள் , பயணிக்க விட்டமையால் உக்ரேனிய கொத்தணி உருவாக்கப்பட்டது என்பதை மக்கள் உணர்ந்தனர்,
இந்த நேரத்தில் உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உற்பத்தி செய்து , தடுப்பூசிகளை போட ஆரம்பித்திருந்தன.
அரசிலிருந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தடுப்பூசி தேவையில்லை என்றும் தம்மிக தேன் சிறந்தது என்றும் கூறினார்கள்.
உலகில் உள்ள நாடுகளில் தடுப்பூசி போடத் தொடங்கிய போது, இலங்கை அரசு , தம்மிக தேன் குறித்து பிரச்சாரம் செய்தது.
இந்தியப் பிரதமர் மோடிதான் இலங்கைக்கு தடுப்பூசியை வழங்கி ஆரம்ப அடியை எடுக்க உதவினார்.
. அவர் இலவசமாக கொடுத்த தடுப்பூசிகள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் , அரசு மக்களுக்கு தம்மிக தேனை அருந்த வைத்திருக்கும்.
உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு தடுப்பூசிகளை வாங்க அங்கீகாரம் அளித்து , இப்போதே கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கூறிய போதே , இலங்கை அரசு , தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால், இலங்கையிலுள்ள 60% பேருக்கு கடந்த ஏப்ரல் 2021 க்குள் இரண்டாவது மாத்திரையான கொவிட் தடுப்பூசிகளையும் போட்டு முடித்திருக்கலாம்.
அப்படியாகியிருந்தால் , கொரோனா தொற்று வந்தாலும் , கொஞ்சம் பேருக்குத்தான் வந்திருக்கும். அப்படி சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், மக்கள் இப்படி இறந்து இருக்க மாட்டார்கள்.
ஏனெனில் அரசாங்கமே இப்போது , கொரோனா தொற்று தாக்கி இறப்பவர்களில் , தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே அதிகம் என தெரிவிக்கிறது.
“ஈஸ்டர் குண்டுவெடிப்பில் இறந்த 268 பேரின் இரத்தக் கறை ஏற்கனவே இந்த அரசாங்கத்தின் கைகளில் துவண்டு உள்ளது”
2019 ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சி மேடைகளில் சொன்ன கதை இதுதான்,….
“உளவுத்துறை அறிக்கைகளின்படி, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மூடியிருந்தால் அல்லது இராணுவம் நிறுத்தப்பட்டிருந்தால் 268 உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்.” என்பதாகும்.
இலங்கை பொதுசன முன்னணி மேடைகளில் அழுதழுது சொன்ன கதை இதுவாகும்.
“அப்படியானால் சுகாதாரத் துறை அளித்த அறிக்கைகளைக் கேட்டு ,
பொதுத் தேர்தலை ஒத்திவைத்திருந்தால்,
தடுப்பூசி கொண்டு வரப்பட்டிருந்தால்,
இந்தியாவில் டெல்டா பரவியபோது நாடு மூடப்பட்டிருந்தால்,
இறந்த 5,620 பேரை கொரோனாவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியும்தானே? “
இன்று எந்தவொரு ஊடமும் இந்தக் கேள்வியைக் எழுப்புவதில்லை. ஆனால் மக்கள் அரசை கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை என்பதால் கடைகளை மக்களே , தாமாக முன்வந்து மூடுகிறார்கள்.
இன்று நடந்திருப்பது
அரசாங்கம் மக்களை முடக்கியது அல்ல,
மக்கள் அரசாங்கத்தை முடக்கியதாகும்.
- உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் (குருதா விக்ரஹய)
- தமிழில் : ஜீவன்