இலங்கையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளதாக பரபரப்பு தகவல்

இலங்கையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித பதிவும் இடம்பெறவில்லை எனவும், எனவே, அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த செய்தியில்,
தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பான தரவுகள் வழங்கும் பொறுப்பு பொது சுகாதார பரிசோதகர்களுக்கே இருக்கின்றது எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் வினவியபோது,
மேற்படி தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், அவை தொடர்பான தரவுகளை சேமிக்க முடியாமல் போனதால் தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு மத்தியிலும் சுகாதார பரிசோதகர்களுக்கு தரவுகளை பதிவுசெய்யும் வேலையையும் செய்ய வேண்டியுள்ளது.
ஒரு தகவலை பதிவுசெய்வதற்கு 4 முதல் 5 நிமிடங்கள்வரை செல்லும். ஒரு சுகாதார பிரிவில் நாளாந்தம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
அப்பணியையும் செய்யும்வேலை ஏனைய பணிகளையும் முறையாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணினி மற்றும் ஆளணி பலம் வழங்கப்படவில்லை.
இதனால் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது.
மக்களுக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.