மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்த ஜனாதிபதி பணிப்பு! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா.
இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொரோனாத் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளளார் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதன்படி முதற்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, செப்டெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் நாடு முழுவதும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டெம்பர் மாதத்தில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.