கணவன் கழுத்து நெறித்துக் கொலை! – மனைவி உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்.

இரத்தினபுரி மாவட்டம், தொடம்பே மண்டதெனிய பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கொலையுண்டவரின் மனைவி உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பிரதான நீதிவான் ஜனிதான ரோஸனி உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க சமன்குமார (வயது 32) என்பவர் கடந்த மாதம் 30 ஆம் திகதி அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் அவர் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், பிரேத பரிசோதனையில் அவர் தூக்க மாத்திரை உட்கொண்டும் கழுத்து நெறித்தும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து, குறித்த நபரின் மனைவியையும் மற்றுமொரு நபரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.
அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.