கேரளா கஞ்சாவுடன் பிரபல தமிழ் வர்த்தகர் மாவடிவேம்பில் கைது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்திற்கு கொண்டு வரத்தயார் நிலையிலிருந்த 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் போதைப்பொருள் வர்த்தகரொருவர் அவரது வீட்டில் வைத்து இன்று 2021-08-22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய ஏறாவூர் பொலிஸ் நிலைய பொலிசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் வர்த்தகரே அதிகளவான கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பிறைந்துரைச்சேனை பிரதேசத்துக்கு வினியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

33 வயதுடைய இவரிடமிருந்து 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் நடவடிக்கை காரணமாக மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் உட்பட போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருவதுடன், வெளிமாவட்டங்களிலிருந்து கல்குடா பிரதேசத்துக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வருவோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா அதிகரிப்பினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் இவ்வாறான நாசகாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

Leave A Reply

Your email address will not be published.