தந்தையையும் மகனையையும் சாகடித்த கொரோனா: இருவரும் முன்னாள் பிரபல விளையாட்டு வீரர்கள்
கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கல்லூரியின் கிரிக்கெட் கழக உறுப்பினருமான சுல்கி மொஹமட் மற்றும் அவரது தந்தையான மருதானை சாஹிரா கல்லூரியின் முன்னாள் பிரபல ரக்பி வீரர் இப்ராஹிம் ஹமீட் ஆகியோர் இரண்டு நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் வசித்து வந்த சுல்கி மொஹமட் நேற்றும், அவரது தந்தை இப்ராஹிம் ஹமீட் நேற்றுமுன்தினமும் உயிரிழந்துள்ளனர்.
1991 – 1992 காலப்பகுதியில் சுல்கி மொஹமட் கொழும்பு றோயல் கல்லூரியின் கிரிக்கெட் அணியில் விளையாடியிருந்த பிரபல வீரராவார். இவர் ஒரு விக்கெட் காப்பாளரும், சிறந்த துடுப்பாட்ட வீரரும் ஆவார்.
சுல்கியின் தந்தை இப்ராஹிம் ஹமீட் மருதானை சாஹிரா கல்லூரியின் பிரபல ரக்பி வீரராவார். 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் ரக்பி அணிக்குத் தலைமை வகித்தவர். இவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தனது பணியை நிறைவு செய்துள்ளார். இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்தனவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் செயற்பட்டார்.
தந்தையும் மகனும் சமீபத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒரு வாரமாக வைத்தியசாலையில் இருந்து சுல்கி மொஹமட் கடந்த 19ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை காலை மீண்டும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சுல்கியின் தந்தை இப்ராஹிம் ஹமீட் கடந்த நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.