தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: 40 ஆயிரம் பொலிஸார் கடமையில்!
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளைக் கண்காணிப்பதற்கு சுமார் 40 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எத்தனை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன எனவும், அமைக்கப்பட்டுள்ள சோதனைக் சாவடிகளின் எண்ணிக்கை எவ்வளவு எனவும் இணையவழி ஊடாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச பொலிஸ் பொறிமுறையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலத்திலும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய பணிகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 ஆயிரம் பொலிஸார் வரை இந்தக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் 900 வாகனப் பரிசோதனை சாவடிகள் உள்ளன. நாளாந்தம் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” – என்றார்.