கொரோனாத் தொற்றாளர்கள் 9,606 பேருக்கு வீடுகளில் சிகிச்சை!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 606 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் வைத்தியர் சேவை பிரிவின் வைத்தியர் அயந்தி கருணாரத்ன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 162 பேர், கம்பஹா மாவட்டத்தில் 1,883 பேர், களுத்துறை மாவட்டத்தில் 1,712 பேர் என வீடுகளில் 9 ஆயிரத்து 606 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை வீடுகளில் சிகிச்சை பெற்று வந்த 26 ஆயிரத்து 173 பூரணமாகக் குணமடைந்து தங்களது பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் 370 பேரே வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளிலிருந்து சிகிச்சை பெறும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீடுகளிலிருந்து சிகிச்சை பெறுவோரின் நோய் நிலைமையை அறிந்துகொள்வதற்காக 900 வைத்தியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த வாரத்துக்குள் வைத்தியர்களின் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – என்றார்.