அமெரிக்கா ஆகஸ்ட் 31க்குள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தலிபான் எச்சரிக்கை.
அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார்.
அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து அமெரிக்கர்களையும் 31ஆம் தேதிக்குள் வெளியேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேல் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்ஸன் அழைப்பு விடுத்துள்ளார்.