நண்பன், சகா, போராளியை இழந்து தவிக்கிறேன். மீண்டும் சந்திப்போம் என கண்ணீருடன் விடை தருகிறேன் .மனோ கணேசன்.

“வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு! 2007ல் பாராளுமன்றத்தில் அரசு பக்கமிருந்து எதிரணி பக்கம் நீங்கள் வந்த போது நான் அனுப்பிய இக்குறிப்பு ஞாபகமிருக்கின்றதா? மீண்டும் சந்திக்கும் வரை கண்ணீருடன் விடை பெறு நண்பா”, என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் மிக உருக்கமான டுவீடர் செய்தியை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
2005-2009 வரை, கொழும்பில் அடைக்கலம் புகுந்திருந்த வடகிழக்கு தமிழர்கள், அதிகாரமிக்க வெள்ளை வேன் கடத்தல் பயங்கரவாத கும்பலினால் “முனிசிபலிட்டி நாய்களை” பிடிப்பதை போல, பிடித்து, கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, பற்றைகளில் சடலங்களாக வீசப்பட்டு கொண்டிருந்த காலம். அதன்போது, கொழும்பு எம்பியாக நான் “வருவது வரட்டும்” என போராடிக்கொண்டிருந்த வேளை, மங்கள சமரவீர எனக்கு இரகசியமாக செய்தி அனுப்பினார்.
மங்கள சமரவீர ஊடக அமைச்சராக இருந்த வேளை, “தானும், ஸ்ரீபதி சூரியராச்சியும் அரசில் இருந்து விலக உள்ளதாகவும், அதுபற்றி தான் ஜனாதிபதிக்கு எழுதும் கடிதத்தில், மனித உரிமை மீறல் வெள்ளை வேன் கடத்தலையும் ஒரு காரணமாக கூற உள்ளதாகவும், அதுபற்றிய விபரங்களை தர முடியுமா?” என கேட்டிருந்தார்.
மங்கள சமரவீரவின் இந்த இரகசிய செய்தி, கொலைக்கார சூழலில், கடத்தல்கார கடலில் தத்தளித்து, ஒரு சிறு துரும்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு படு உற்சாகத்தை தந்தது. அவருக்கு தகவல்களை அனுப்பினேன்.
மங்கள சமரவீர சொன்னதைபோல், அரசில் இருந்து விலகும் தீர்மான காரணங்களை ஜனாதிபதிக்கு தெரிவித்த கடிதத்தில் வெள்ளை வேன் கடத்தல் மனிதவுரிமை மீறல் என்பதையும் காரணமாக கூறி இருந்தார். பின்னர் 2007 ஜூன் 15 திகதியன்று பாராளுமன்றத்தில் அரசு பக்கம் இருந்து எதிரணி பக்கம் அவர் வந்து அமர்ந்தார். அவர் வரப்போவதை அறிந்த நான் சில நிமிடங்களுக்கு முன், “வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு”! என்று என் கையால் எழுதிய சிறு குறிப்பை அவருக்கு அனுப்பினேன். அதை வாசித்து என்னை பார்த்து மங்கள சமரவீர கையை காட்டி, சிரித்தது இன்னமும் என் கண்களில் நிழலாடுகிறது.
மங்கள சமரவீர கட்சி மாறியது, எதிரணியில் இருந்து, பதவி, பவிசு வேண்டி, அதிகாரம் உள்ள ஆளும்கட்சிக்கு அல்ல என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்று “தேசபக்த” யுத்தம் என்று, போர் நடந்துக்கொண்டிருந்த வேளையில், யுத்த களத்துக்கு வெளியேயும் தமிழர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், பல தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதே அரசில் அமைச்சர்களாக இருந்த வேளையில், ஏனைய பல எதிரணி தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை விட்டு ஓடிப்போக வேண்டிய நிலைமை ஏற்பட்ட வேளையில்தான், அரசில் இருந்து மங்கள தன் நண்பன் ஸ்ரீபதி சூரியராச்சியுடன் தைரியமாக பதவி விலகினார். அதனால்தான் எம் பக்கத்தை நோக்கிய, மங்கள சமரவீரவின் வருகை எனக்கு அன்று பெரும் உற்சாகத்தை தந்தது.
மங்கள சமரவீர கடைசி வரை இந்நாட்டை பல்லின, பன்மத, பன்மொழி நாடாகவே கருதினார். இந்த எண்ணம், நாட்டின் அதிகாரபூர்வ கொள்கையாக மாற வேண்டும் என்பதே அவரது அவா. ஆகவே அவரது எதிர்பாரா மறைவுக்கு முந்தைய அவரது வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைந்து அவரது ஆத்மா சாந்தியடைய, “நாம் அனைவரும் இலங்கையர், இந்நாடு ஒரு பன்மைத்துவ நாடு” என்ற கொள்கையை நிஜமாக்க நாம் உழைக்க வேண்டும்.