தமிழ்த் தேச மக்களின் விடுதலைக்காக குரல் எழுப்பியவரை இழந்துவிட்டோம்! அனுதாபச் செய்தியில் மாவை சேனாதிராஜா.
மங்கள சமரவீர பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் – அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மங்கள சமரவீரவை நாடு இழந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தோம்.
இவ்வாறு தொடர்ச்சியாகப் பல திங்களாக கொரேனா வைரஸ் தொற்றால் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். இலட்சக்கணக்கில் உயிருக்குப் போராடும் மனிதகுலத்தின் ஈனக்குரலை நாம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
மங்கள சமரவீர பௌத்த சிங்கள தீவிரவாத தேசத்தில் – அரசியல் வரலாற்றில் தமிழ்த் தேச மக்களின் நீதிக்காக, அரசியல் விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர்.
இவ்வாறு செயற்பட்டு வந்த மனித நேயமிக்க ஓர் அரசியல் தலைவனை ஜனநாயகம், மனிதாபிமானம், விடுதலைக்காக ஏங்கி நிற்கும் மக்கள் இழந்து நிற்கின்றார்கள் என்கின்றபோது நாம் நெஞ்சாரத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம்.
மங்கள சமரவீரவை ஒரு பௌத்த சிங்களத் தலைவனாக நாம் பார்த்ததில்லை. அவர் அவ்வாறு செயற்பட்டதும் இல்லை.
போரினால் அழிந்துபோன தமிழர் பிரதேசத்தையும் சீர்குலைந்துபோன மக்களையும் அரவணைத்து மீண்டும் வாழ்வு பெறவும், உரிமை பெறவும் மங்கள முன்னின்று செயலாற்றியமையை நினைவுகூருவோம்.
பௌத்த சிங்களத் தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் மங்கள சமரவீர தவறவில்லை என்பதைக் கூறுவோம். பௌத்த சிங்களத் தீவிர சக்திகள் மங்களவைத் திட்டித் தீர்த்தமையை அறிவோம்.
நாள்தோறும் கொரோனா வைரஸ் கொடுமையால் உயிர்ப்பலி கொடுக்கும் மக்களில் இலங்கைத் தீவில் மனித நேயமிக்க ஒரு அரசியல் தலைவனை இழந்துவிட்டோம் என்பதுதான் இன்றைய முக்கிய செய்தி ஆகும்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் இழந்துபோன கௌரவத்தை – ஜனநாயகத்தை – நீதியை ஐ.நா மன்றத்திலும் உலகத் தலைவர்கள் மத்தியிலும் மீட்டுப் பெரும் மேன்மையைப் பெற்றவர் மங்கள சமரவீர.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையை நிலைநாட்டிய நட்சத்திரமாய், தலைவனாய் விளங்கிய மங்களாவை இழந்து தவிக்கின்றோம் என்பதையும் பதிவு செய்கின்றோம்.
மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒரு மகத்தான தலைவனை, தென்னிலங்கையில் ஜனநாயக நட்சத்திரத்தை இழந்த அனைவருடனும் அன்னார் ஆத்ம சாந்திக்காக நாமும் இணைந்து பிரார்த்திக்கின்றோம். அஞ்சலி செலுத்தி நிற்கின்றோம்” – என்றுள்ளது.