அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசியினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசியினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 2020 ஜூலை மாதம் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு எவ்வாறு இடஒதுக்கீடு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாததால் மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடுத்தது. இதுகுறித்த விசாரணையின் போது, தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த இயலாது என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது. அத்துடன், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்நிலையில், மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.