ஓணம் பண்டிகையால் கேரளாவில் இன்னமும் குறையாது உச்சம் தொடும் கொரோனா
கேரளாவில் கொராணா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 26ம் தேதிக்கு பின் 24,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது இப்போது தான் என்பதால் அச்சம் நிலவுகிறது.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரொனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் தற்போது பெருமளவில் பாதிப்பு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் கேரளாவில் மட்டும் இன்னமும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 என்ற அளவில் இருந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24,296 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்துக்கு பின்னர் இந்த அளவுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் 27ம் தேதி 24,166 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மே 29ம் தேதி 23513 மற்றும் ஆகஸ்ட் 3 அன்று 23676 என்று இரு முறை 24,000 நி நெருகியது. ஆனால் அதன் பின்னர் 20,000 என்ற அளவுக்கு குறைந்தது.
இந்நிலையில் அங்கு ஓனம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஓனம் கொண்டாட்டங்களும் கொரோனா பரவலுக்கு வித்திட்டதாக கருதப்படுகிறது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், அடுத்த சில வாரங்கள் கேரளாவுக்கு சோதனையான காலகட்டம் ஆகும். ஓனம் பண்டிகை ஷாப்பிங்கில் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால் எதிர்வரும் நாட்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை ஓனம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது.
இதையடுத்து கேரளாவில் டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் 15.63% ஆக திங்களன்று இருந்தது, இது செவ்வாயன்று 18.04 % ஆக அதிகரித்திருக்கிறது.
கேரளாவில் அதிகபட்ச பாதிப்பை சந்தித்த மாவட்டமாக இருப்பது எர்ணாகுளம். அங்கு 3149 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம், கன்னூர், ஆழப்புழா, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு பதிவாகி வருகிறது.