கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரு ‘டோஸ்’ இடைவெளி 84 நாட்களாக நீட்டிக்கப்பட்டதன் காரணம், பற்றாக்குறையா? அல்லது செயல்திறனா? என, வினா எழுப்பிய கேரள உயர் நீதிமன்றம்
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் அனைவரும், தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியும், மக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமும் காட்டி வருகின்றனர்.
மேலும், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டால், இரண்டாவது டோஸ் 84 நாட்கள் கழித்து தான் செலுத்திகொள்ளவேண்டும் என கூறப்படுகிறது.
இதனால், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரு ‘டோஸ்’ இடைவெளி 84 நாட்களாக நீட்டிக்கப்பட்டதன் காரணம், பற்றாக்குறையா? அல்லது செயல்திறனா? என, கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தன் 5,000 பணியாளர்களுக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்தியது. அரசின் காலவரம்பு நீட்டிப்பு காரணமாக, அவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்த முடியவில்லை என, கொச்சி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இதனால், மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போது, கோவிஷீல்டு இரு டோஸ்களுக்கு இடையே முதலில் நான்கு வார இடைவெளி அறிவிக்கப்பட்டது. பின் 84 நாட்களாக உயர்த்தப்பட்டது ஏன்?’ என, மத்திய – மாநில அரசு களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கால இடைவெளி தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்’ என, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீதிபதி தெரிவிக்கையில், இரு டோஸ்களுக்கான இடைவெளி, தடுப்பூசியின் செயல்திறன் அடிப்படையிலானது என்றால் அதனை அனைவரும் ஏற்க வேண்டும். ஆனால் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடைவெளி நீட்டிக்கப்பட்டு இருந்தால், தடுப்பூசியை வாங்க முடிந்தவர்கள் 84 நாட்கள் காத்திருக்காமல் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
செயல்திறன் அடிப்படையிலானது எனில் அதற்கான அறிவியல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார். இது குறித்த தகவல்களை அளிக்க, மத்திய அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.