தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மதுவரித் திணைக்களத்தின் 10 பிரிவுகள் இழுத்து மூடல்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 21 பேர் இனங்காணப்பட்டதால், மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 90 சதவீதமான பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கும் மேலதிகமாக கொரோனா வைரஸ் பரவலின் அவதான நிலைமையைக் கருத்தில்கொண்டு நாடளாவிய ரீதியில் மதுவரித் திணைக்களத்தின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், மதுவரித் தலைமையகத்தின் மூடப்படாத பிரிவுகளின் நடவடிக்கைகள் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க மேலும் கூறியுள்ளார்.