குடாநாட்டில் இன்று ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா உறுதி மாவட்ட அரச அதிபர் மகேசன் தகவல்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேறுகளின்படி 239 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறுக்கையிலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
‘யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 725 பேருக்கு இற்றைவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
யாழில் நேற்றைய கணக்கெடுப்பின்படி 213 பேர் இதுவரை இறப்புக்குள்ளாகியுள்ளார்கள். மேலும் 3 ஆயிரத்து 686 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 548 அங்கத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுமக்கள் இறுக்கமாக சுகாதார கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொரோனா செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன் மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும்.
அதேவேளை, சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல் வேண்டும், சமூக இடைவெளியைப் பேணவேண்டும். தேவையற்ற நடமாட்டம் மற்றும் ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, இந்த நடைமுறைகளைப் பின்பற்றி உங்களையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை, எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை சுகாதாரத் தரப்பினர், கிராமசேவையாளர்கள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக்கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். இவை இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
ஆகவே, பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தலின்படி தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகளைப் பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது அவசியமாகும்” – என்றார்.