ஈஸ்டர் தாக்குதல் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு கண்காட்சியாகக்கூட இருக்கலாம்! சஜித் அணி.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பானது ஊடகத்துக்கான கண்காட்சியாகக்கூட இருக்கலாம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது.
‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய 311 பேர் தடுப்புக் காவலில் வைக்கட்டுள்ளனர். ஒரு இலட்சம் தொலைபேசி உரையாடல்கள் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 36 கோடி 50 இலட்சம் ரூபா பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்று பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து பொலிஸ்மா அதிபர் விசேட காணொளி அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஊடகங்களிடம் கூறியதாவது:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும், தாக்குதலின் பின்புலம் மற்றும் பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாம் குரல் எழுத்தோம். பேராயர் உள்ளிட்ட தரப்பினரும் இதனை வலியுறுத்தினர்.
தாக்குதல் நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்குப் பின்னரே பொலிஸ்மா அதிபர் ஒருவர் வெளியில் வந்து அது தொடர்பில் கருத்து வெளியிடுகின்றார். கறுப்புக்கொடிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கடும் எதிர்ப்புகள் வெளிக்கியம்பியுள்ள பின்புலத்திலேயே குறித்த அறிவிப்பும் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இது கண்காட்சியாகக்கூட இருக்கலாம். ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தில் உறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் அரசு செயற்படாதது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.