ஆட்சியைக் கவிழ்ப்பதே எதிரணியினரின் இலக்கு! ரோஹித குற்றச்சாட்டு.

“கொரோனா வைரஸ் என்ற சர்வதேச தொற்று நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பதை இலக்காகக்கொண்டே எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. இதற்காகவே நாட்டைத் தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.”

இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி கொரோனாவுக்கு மத்தியிலும் வாழ நேரும் நிலைமையே உருவாகும். எனவே, வைரஸ் தொற்றை ஒழிக்கும் செயலை முன்னெடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இதன்படி சுகாதார நடைமுறைகளுக்கமைய சுற்றுலாத்துறையை செயற்படுத்த வேண்டும். கைத்தொழில் துறைகள் மற்றும் தொழிற்சாலைகள் செற்பட வேண்டும்.

நாடு முடக்கப்பட்டிருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம் துளியளவும் குறைக்கப்படவில்லை. நெருக்கடி நிலைமையிலும் முழு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், லொக்டவுணால் நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்குதான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தொடர்பிலும் சிந்தித்து நாம் விழிப்பாக செயற்பட வேண்டும்.

நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நாடும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று என்ன சொல்கின்றனர், பகுதியளவே நாடு மூடப்பட்டுள்ளது, எனவே, முழுமையாக மேலும் இரண்டு வாரங்கள் முடக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தொழிற்சாலைகளை மூடுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.

தொழிற்சாலைகள் இயங்காது, ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தால் இந்நாட்டுக்கான அந்திய செலாவணி கிடைக்காது. நாட்டுக்கு வருமானம் இல்லாமல் போனால் டொலர் இருக்காது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் எரிபொருள் மற்றும் மருந்து வகைகளை வாங்க முடியாது.

எனவே, இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தி, அரசை வீட்டுக்கு அனுப்பும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் முன்னெடுக்கப்படுகின்றது. நாடு ஸ்தீரமற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதைத்தான் இத்தகையவர்கள் விரும்புகின்றனர். கர்ம வினை என்பது இவர்களை சும்மா விடாது. அடுத்த பிறவியிலாவது அவர்களுக்கு தகுந்த பாடம் கிடைக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.