100 வீதம் டெல்டா ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் பேராபத்து பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை.
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸின் திரிபான ‘டெல்டா’ தொற்றே பரவி வருகின்றது என ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் ‘சுப்பர் டெல்டா’ திரிபு உருவாகலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
“இந்தியாவின் டெல்டா பிளஸை விடவும் ‘சுப்பர் டெல்டா’ வீரியம் கொண்டதா என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தெரியாது. எதிர்காலத்தில் பரவுமா என்பது தொடர்பில் ஆய்வு நடத்த கால அவகாசம் வேண்டும். இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் தடுப்பூசித் திட்டம் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் செப்டெபர் மாதம் இறுதியளவில் நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலான சூழல் உருவாகும் என ஊகிக்கின்றோம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.