நாடு முடக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு! – எஸ்.பி. திட்டவட்டம்.
“நாடு முடக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் தொடர் பொது முடக்க செயற்பாட்டை நான் எதிர்க்கின்றேன்.”
இவ்வாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
‘கொரோனா வைரஸ் தொற்று என்பது கொடிய ஆட்கொல்லி நோய் கிடையாது. நாட்டில் வைரஸ் தொற்றியவர்களில் 98 வீதமானோர் குணமடைந்துள்ளனர். எனவே, மக்கள் மத்தியில் மரண பீதியை ஏற்படுத்தக்கூடாது’ என்று எஸ்.பி. திஸாநாயக்க ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்து சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கண்டனக்கணைகளும் குவிந்தன.
இந்நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதும் இது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க கருத்து வெளியிட்டார்.
தான் ஏற்கனவே வெளியிட்ட கருத்துகளை மீள நினைவுப்படுத்திய எஸ்.பி. திஸாநாயக்க அதனை நியாயப்படுத்தும் நோக்கில் சில விடயங்களையும் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது:-
“உலகளவில் நிபுணத்துவம் மிக்க 6 ஆயிரம் பேராசிரியர்கள் இணைந்து கொரோனா விவகாரம் தொடர்பில் மனுவொன்றை முன்வைத்துள்ளனர்.
‘கொரோனாத் தொற்று தொடர்பில் விழிப்பாக இருங்கள். ஆனால், மக்கள் மத்தியில் மரண பீதியை ஏற்படுத்த வேண்டாம். நாட்டை முடக்கும் செயலுக்குச் செல்லக்கூடாது. அவ்வாறு செல்வதால் மக்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும். உள ரீதியில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா தொடர்பில் மரண பீதியை ஏற்படுத்த வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவும். சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவும். நாடு தொடர்ந்து முடக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு” – என்றார்.