வவுனியாவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களும், அதனூடாக ஏற்படும் மரணங்களும் மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும் என வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களது நிலைமைகள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா வைத்தியசாலையில் கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையான காலத்தில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு 30 வீதமானவர்கள் ஒட்சிசன் தேவையுடையோராக காணப்பட்டிருந்தனர்.
இருந்தபோதும், ஓகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதிவரை 500 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதுடன் இவர்களில் 55 வீதமானவர்கள் ஒட்சிசன் தேவையுடையோராக காணப்படுகின்றனர். இவர்களில் 17 பேர் குறித்த காலப்பகுதியில் மரணித்துள்ளனர். கடந்த இரு வாரங்களில் தொற்றாளர்கள், ஒட்சிசன் தேவையுடையோர் மற்றும் மரணங்கள், அதற்கு முந்திய இருவாரங்களுடன் ஒப்பிடுகையில், இருமடங்கைவிட அதிகரித்துள்ளமை எமது மாவட்டம் மிக ஆபத்தான பிரதேசமாக மாறி வருவதனை சுட்டிக்காட்டுகின்றது.
மாவட்ட ரீதியில் பார்க்கும் போது ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரையான காலத்தில் 618 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் 8 மரணங்கள் சம்பவித்திருந்தது. 15ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதிவரையான இரு வாரங்களில் 1903 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் 34 மரணங்களும் சம்பவித்துள்ளது. மேலும், ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2500 வரையிலான தொற்றாளர்களும் 42 மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் தொடக்கம் கடந்த யூன் மாதம் வரையான ஒன்றரை வருட காலத்தில் 900 இற்கும் குறைவான தொற்றாளர்களும் 13 மரணங்களுமே பதிவுசெய்யப்பட்டிருந்தமை தற்போதைய தொற்றுநிலையின் வீரியத்தையும், மாவட்ட மக்களின் அதியுச்ச பங்களிப்பின் அவசியத்தன்மையையும் தெளிவாக வேண்டிநிற்கின்றது.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுகாதார பராமரிப்பு செயற்பாடுகள் கைமீறிப்போககூடிய நிலையில், வவுனியா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களை சிறப்பாக பராமரித்து வரக்கூடியதாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவது, தாம் சார்ந்த சமுகத்தின் அனைத்து நோயாளிகளினதும் தேவைக்கேற்ற தடையற்ற சுகாதார சேவையை பெற்றுக்கொள்ள அத்தியாவசியமானது என குறிப்பிட்ட பணிப்பாளர், மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதல்ல மக்களுக்கான சேவையை வழங்கும் ஓர் நிறுவனம் / வைத்தியசாலையின் செயல் எனவும் தெரிவித்தார்.
எனினும், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மனிதவலு மற்றும் ஒட்சிசன் தேவை அதிகரிப்பானது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அனுமதிக்கப்படும் நோயாளர்களை பராமரிப்பதில் கடும் சிக்கல் நிலையை ஏற்படுத்தியிருந்த போதிலும் நிர்வாகத்தின் முன்கூட்டிய எதிர்வுகூறல், செயற்பாடு மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் கொரோனா நோயாளர்களின் தடையின்றிய சிகிச்சையை முன்கொண்டுசெல்ல வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.