வடக்கில் பல பிரதேசங்களிலும் சமூகத் தொற்றானது கொரோனா!
“கொடிய கொரோனாப் பரவுகை மேல் மாகாணத்திலும் வடக்கு மாகாணத்திலும் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் சமூகத் தொற்றாகப் பரவிவிட்டது.”
இவ்வாறு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவர் பேராசிரியர் மனுஜ் சி. வீரசிங்க தெரிவித்தார்.
“கொரோனா வைரஸின் திரிவான டெல்டா வைரஸ் தனது கோரத் தாண்டவத்தின் ஆரம்ப கட்டத்தைத்தான் இப்போது காட்டியுள்ளது. இது உச்சகட்டத்தை எட்டும்போது அது தாங்க முடியாத பேரழிவைத் தரும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாத் தொற்றுப் பாதிப்புப் பற்றிய புள்ளிவிவரங்களை நம்பி அவற்றில் தங்கி இருக்காதீர்கள். உண்மை நிலைமை மோசமானது.
வெறும் பொது முடக்கம், ஊரடங்கினால் பயன் இல்லை. தொற்றுப் பரவலைத் தவிர்க்கச் செய்யும் விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளையே எடுக்க வேண்டும்.
முடக்கத்தை அறிவித்துவிட்டு, பின்னர் அதனை நீக்குவதாக வெறுமனே பிரகடனப்படுத்தினால் மக்கள் மீண்டும் திரளுவர். அடங்கிக் கிடந்த தொற்றுப் பரவல் மீண்டும் எகிறிப் பாய அது வழி செய்ததாக இருக்கும்.
எனவே, மருத்துவ – சுகாதார நிபுணர்களின் விஞ்ஞான ரீதியான பார்வையிலே விடயங்களை அணுகி முடிவுகளை எடுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும்” – என்றார்.