புதிய அரசமைப்பு, ஜெனிவா விடயம்: ஆராய்ந்தது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 1.15 வரை இணைய வழியாக நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் துணைவியார் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கெளரிசங்கரி தவராசாவின் மறைவுக்கும், மற்றைய உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் பேத்தியாரின் மறைவுக்கும் கட்சியின் அனுதாபங்களைத் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் அனுப்பிய யோசனைகளைத் தொடர்ந்து அந்தக் குழுவை நாம் சந்தித்துப் பேசிய விடயங்கள் பரிமாறப்பட்டன.
அந்தக் குழுவுக்கும் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு அழைத்தமையும் அது பிற்போடப்பட்டமையும், இந்தப் பின்னணியில் நடைபெற்ற தொடர்பாடல்களின் விபரங்களும் விளக்கிக் கூறப்பட்டன.
அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலும் இதில் அடங்கும்.
ஐ. நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாக இருக்கும் தருணத்தில் இந்த முயற்சிகளின் தாக்கங்கள் குறித்தும், இந்த முயற்சிகளில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஈடுபாடு குறித்தும் ஆழமாக ஆராயப்பட்டது.
இறுதியில் இதுவரைக்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் சரியான முறையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், தொடர்ந்து அரசியல் குழு இவ்விடயங்களை ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்படவிருக்கும் அறிக்கை சம்பந்தமாகவும் உரையாடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான உரையாடல்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலரது ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களும் அறிவிக்கப்பட்டன.
வெகுவிரைவில் மத்திய செயற்குழுவை கூட்டுவது என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவடைந்தது” – என்றுள்ளது.