சிவப்பு சீனி 130 ரூபாவுக்கு! கூட்டுறவு நிறுவனங்கள் ஊடாக விநியோகம்.
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களினூடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் புதன்கிழமை முதல் குறித்த விலைக்கு சிவப்பு சீனியை நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“இந்நாட்டில் மாதமொன்றுக்கு 45 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
இதில் 23 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி மக்கள் பயன்பாட்டுக்கும் மீதமுள்ள சீனி வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கமைவாக ஒரு நாளைக்கு 1,500 மெட்ரிக் தொன் சீனி, நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
இன்று மேலும் மூன்று களஞ்சியசாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலைகளில் இருந்து 600 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த களஞ்சியசாலைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளன. நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 4 ஆயிரத்து 800 தொன் சீனியைப் பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலையொன்று ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது” – என்றார்.