பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி!
“அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.”
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று அத்தியாவசிய மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இவை தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கும் கொடுப்பனவையும் அரசு குறைத்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலேயே அண்மைய நாட்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.
உலக சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்தமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை, ஏற்றுமதி, இறக்குமதி வரையறுக்கப்பட்டமை, கொரோனாத் தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவையே அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.
தினமும் நுகர்வுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான பால்மா, சீனி, எரிவாயு, மண்ணெண்ணெய் அதேபோன்று எரிபொருட்களின் விலையேற்றத்தை மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
இதில் பிரதான காரணியாக சீனியின் விலையேற்றம் காணப்படுகின்றது.
அதேபோன்று பால்மா, பிரதான ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உள்ளது.
மக்கள் தங்களது பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போலவே அரசு செயற்பட்டு வருகின்றது.
துறைசார்ந்த அமைச்சர் தன்னால் எதனையும் செய்ய முடியாது என்று கூறினார்.
தற்போதைய நெருக்கடிச் சூழலில் இவ்வாறான ஒரு பதிலையா மக்கள் அரசிமிருந்து எதிர்பார்க்கின்றனர் என்பதே எமது கேள்வியாக உள்ளது.
அரசு தனது பொறுப்பை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது இதனூடாகத் தெரியவருகின்றது” – என்றார்.