நான்கு மாவட்டங்களில் சீரற்ற காலநிலை! 191 குடும்பங்களைச் சேர்ந்த 848 பேர் பாதிப்பு!
நான்கு மாவட்டங்களில் நீடித்த சீரற்ற மழை காலநிலை காரணமாக 191 குடும்பங்களைச் சேர்ந்த 848 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் வீடொன்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.
கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல மற்றும் ஜாஎல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் கடுவெல பிரதேசத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், காலி மாவட்டத்தில் வதுரம்ப பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.