ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் சுந்தர் விளையாட மாட்டார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகளும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது ஆயத்தமாகி ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன
இந்த தொடரில் ஏற்கனவே சில வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற முடியாமல் இருக்கும் வேளையில் தற்போது பெங்களூரு அணியில் விளையாடி வரும் தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் அந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது இங்கிலாந்து சென்ற அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னர் நடைபெற்ற வலைப்பயிற்சியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலையில் அங்கிருந்து நாடு திரும்பினார். இருப்பினும் அவரின் விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணம் அடையாததால் அடுத்து வர இருக்கும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் சுந்தர் விளையாட மாட்டார் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக பெங்களூர் அணியில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 21 வயதான வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருவதன் மூலம் இந்திய டி20 அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கும் இந்நேரத்தில் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தமான செய்திதான்.