ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஆயுதமாகும் அகதிகள் : சண் தவராஜா
தலீபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவை நோக்கிய மற்றுமொரு அகதிகள் படையெடுப்பு நிகழலாம் என்கின்ற ‘அச்சம்’ வெளியிடப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் அமெரிக்கப் படையெடுப்பு நிகழ்ந்த ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்ததைப் போன்று பெருமளவிலான மக்கள் இடப்பெயர்வுகள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கப்படும் மக்கள் மாத்திரமன்றி, பொருளாதார நலவாழ்வை எதிர்பார்க்கும் மக்களும் இந்தத் தருணங்களைப் பயன்படுத்தி இடம்பெயர முனைகின்றனர்.
சமமற்ற வளப் பங்கீடு நிலவும் உலகில் இத்தகைய பொருளாதார அகதிகளின் புலம் பெயர்வு தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
2003 இல் ஆரம்பமான ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்டது மாத்திரமன்றி பல இலட்சக் கணக்கானோரை அகதிகளாக இடம்பெயரவும் நிர்ப்பந்தித்துள்ளது. இருபது வருடங்களை நிறைவு செய்யவுள்ள இந்தப் போரின் விளைவான இடப்பெயர்வு இன்னமும் முடிவுறாத நிலையே உள்ளது.
2001 இல் ஆரம்பமான லிபிய ஆயுத எழுச்சி பல்லாயிரக் கணக்கான மக்களைப் பலிவாங்கிக் கொண்டது மாத்திரமன்றி, பல ஆயிரக் கணக்கானோரை அகதிகளாக்கியும் உள்ளது. மத்தியதரைக் கடலில் மறைந்துள்ள ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் தினமும் படகுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய வண்ணமேயே உள்ளனர். ஆயுத மோதல்கள் இன்னமும் முடிவுறாத சூழலில் மரணங்களும், ஏதிலி வாழ்வும் தொடர்கின்றன.
‘அரபுலக வசந்தம்’ என்ற பெயரோடு ஆரம்பமான சிரிய உள்நாட்டுப் போர் ஒரு காலகட்டத்தில் உலக வல்லரசுகளின் போராக விரிவடைந்தது. ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தப்பியோடினர். 2015 ஆம் ஆண்டில் இலட்சக் கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை வந்தடைந்தனர். இந்த வரவு இன்றும் தொடர்கிறது.
பல பத்தாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போர் பெருமளவிலான மக்களை அகதிகளாக ஆக்கியுள்ளது. தற்போது தலீபான்களால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல்லாயிரக் கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
ஆகஸ்ட் 13ஆம் திகதி முதல் தலீபான்களிடம் இருந்து ஆபத்தை எதிர்நோக்கக் கூடிய மக்களை வெளியேற்றுவதில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
2 வாரங்களில் சுமார் 2 இலட்சம் மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையான புள்ளி விபரங்கள் நாடு வாரியாக வெளியிடப் படாதுவிட்டாலும் கிடைக்கும் தரவுகள் இவ்வாறு அமைகின்றன.
26ஆம் திகதி வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் அமெரிக்க 88,000 பேரை காபுலில் இருந்து வெளியேற்றியுள்ளது. இதில் ஏறக்குறைய 4,500 பேர் அமெரிக்கப் பிரசைகள் ஆவர். பிரித்தானியா 15,000 பேர், யேர்மனி 5,100 பேர், இத்தாலி 4,400 பேர், அவுஸ்திரேலியா 4,000 பேர், கனடா 3,700 பேர், பிரான்ஸ் 2,100 பேர் என இந்தப் பட்டியல் நீள்கின்றது. இதனைவிட வேறு பல ஐரோப்பிய நாடுகளும் பல ஆயிரம் பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியிருக்கின்றன.
அமெரிக்கப் படைத்தரப்பில் இருந்து வெளியாகும் தகவல்களின் படி குறைந்தது 3 இலட்சம் வரையான ஆப்கானிஸ்தான் நாட்டவரை அங்கிருந்து வெளியேற்றும் உத்தேசம் இருப்பதாகத் தெரிகின்றது.
இவ்வாறு வெளியேற்றப்படும் ஆப்கான் நாட்டவர்கள் பெரும்பாலும் அமெரிக்கப் படை நடவடிக்கைகளுக்கு ஏதோவொரு வகையில் ஒத்துழைப்பு வழங்கியவர்களாக உள்ளனர். தவிர, பெண்ணுரிமை மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகளில் பங்கெடுத்தோர், தொண்டு நிறுவனங்களில் பணி புரிந்தோர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இவ்வாறு வெளியேறுவோர் பெரும்பாலும் வெளிநாட்டுப் பிரசா உரிமைகளைப் பெற்றவர்களாகவோ, பிற நாட்டுப் படைகளொடு தாம் ஒத்துழைத்ததை நிரூபிக்கும் ஆவணங்களைக் கொண்டவர்களாகவோ உள்ளனர்.
ஆனால், தலீபான்களின் கொள்கைகளோடு உடன்படாத சாமானிய மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேறு மார்க்கங்களை நாட வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் அயல் நாடுகளின் எல்லைகளைக் கடந்து மிகவும் ஆபத்தான பாதைகள் ஊடாகப் பயணம் செய்து ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
ஆனால், இவ்வாறு தமது உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பிய மண்ணில் கால்பதிக்கும் ஆப்கானிய அகதிகளுக்கு அங்கே செங்கம்பள வரவேற்பு இல்லை என்பதே கசப்பான உண்மை.
குறிப்பாக ‘நடுநிலைமை நாடு’ என வர்ணிக்கப்படும் சுவிற்சர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகள் சட்டத்துக்குப் புறம்பான வழிகள் ஊடாகத் தமது நாடுகளை அடையும் ஆப்கான் அகதிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளன.
2015ஆம் ஆண்டு சிரிய அகதிகள் ஐரோப்பாவுக்குள் சாரிசாரியாக நுழைந்த போது அவர்களை இருகரம் நீட்டி வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் ஆப்கான் அகதிகள் விடயத்தில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இந்தக் காலப் பகுதியில் தனது நாட்டின் ஊடாக அகதிகள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஹங்கேரி எல்லையோர வேலிகளை அமைத்தபோது, அந்தச் செயற்பாடு ஐரோப்பிய நாடுகளின் பாரிய கண்டனங்களுக்கு ஆளானது.
தற்போது, போலந்து அதேபோன்று எல்லையோர வேலியை அமைத்து வருகின்றது. 2.5 மீற்றர் உயரமான இந்த வேலி அமைக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
இதேபோன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளான லற்வியா மற்றும் லித்துவேனியா ஆகியனவும் அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்த தமது எல்லையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகின்றன. வார்சோவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய எல்லைப் பாதுகாப்பு நிறுவனமான ‘புரொன்ரெக்ஸ்’ இந்த நாடுகளின் எல்லைகளை ஒட்டி விசேட கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
உலகின் கண்களில் இருந்து பெரிதும் மறைக்கப்பட்ட இந்த விடயங்கள் ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெலாரஸ் நாட்டின் ஊடாக போலந்து நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற 32 ஆப்கான் அகதிகளும் 41 ஈராக்கியர்களும் தடுக்கப்பட்டுள்ளார்கள். மீண்டும் பெலாரஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட இவர்கள் தற்போது எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி சூனியப் பிரதேசத்தில் நிர்க்கதியாக உள்ளனர். இவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் குறித்த அகதிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், தற்காலிக வதிவிடம் என்பவற்றை வழங்குமாறு போலந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து வெளியட்டுள்ள ரஸ்யா, ஆப்கானிஸ்தான் போரில் பங்கெடுத்துக் கொண்ட போலந்து, அந்த நாட்டில் இருந்து தஞ்சம் கோரி வந்திருப்போரை நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது விந்தையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேற்குலகின் சீற்றத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ள பெலாரஸ், அகதிகளை ஒரு ஆயுதமாகப் பாவிப்பதாக அயல்நாடான லித்துவேனியா குற்றம் சாட்டியுள்ளது.
மின்ஸ்க் விமான நிலையத்தின் ஊடாக வரும் சிரிய மற்றும் ஈராக்கிய அகதிகளை அரசாங்கமே பேருந்துகள் மூலம் ஏற்றிவந்து எல்லையோரமாக இறக்கிவிடுவதாக லித்துவேனியா தெரிவித்துள்ளது.
அந்த நாட்டவர்கள் மட்டுமன்றி ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, காம்பியா, கினி மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகளும் இவ்வாறு மின்ஸ்க் விமான நிலையத்தைப் பாவித்து ஐரோப்பாவினுள் பிரவேசிப்பதாகக் கூறும் லித்துவேனிய அரசாங்கம், தனது நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஐரோப்பிய நாடுகளைப் பழிவாங்கும் நோக்குடன் பெலாரஸ் அரசுத் தலைவர் அலெக்ஸான்டர் லுகஷெங்கோ இவ்வாறு நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுகிறது.
சொந்த நாட்டில் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ முடியாத நிலையிலேயே நிம்மதியான வாழ்வைத் தேடி உலகம் முழுவதும் மக்கள் அலைந்து வருகின்றார்கள். இத்தகைய தேடலில் இடைநடுவே மடிந்து போனவர்கள் ஏராளம். எத்தனையோ இடர்பாடுகளைத் தாண்டி ஐரோப்பாவின் வாசலில் கால்வைத்த பின்பும் அவர்களை வேண்டத்தகாதவர்களாகக் கருதுவது ஏற்புடைத்ததல்ல. இத்தனைக்கும் அவர்களின் அவல வாழ்வில் சம்பந்தப்பட்ட நாடுகளும் ஏதொவொரு வகையில் காரணமாக இருக்கையில் அவர்களை வெறுத்தொதுக்குவது கொடுமையிலும் கொடுமை.