கட்டாய மதமாற்றங்கள் குறித்து ஹரியானா முதல்வர் முன்வைத்த எச்சரிக்கை
ஹரியானாவில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் விவசாயிகளை போராட தூண்டிவிடுவதே காங்கிரஸ் தலைவர்கள் தான் என குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ஹரியானா முதல்வர், அம்மாநிலத்தில் கட்டாய மதமாற்ற சட்டம் விரைவில் அமலாகும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்துள்ளன. கட்டாய மதமாற்றங்கள் நிகழ்வதை தடுக்க நமக்கு ஒரு சட்டம் தேவை. இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு சட்டமாக கொண்டுவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஹரியானா காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதற்காக ஹரியானா முதல்வர் பதவி விலக வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மனோகர் லால் கட்டார் கூறுகையில், “பஞ்சாபில் அமரீந்தர் சிங் தான் விவசாயிகளை போராட தூண்டிவிடுகிறார்.
ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள். சாலைகளை நீண்ட காலம் மறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவர் யார் (அமரீந்தர் சிங்) என்னை ராஜினாமா செய்ய சொல்வதற்கு? உண்மையில் டெல்லி எல்லையில் விவசாயிகளை போராட தூண்டிவிடும் அவர் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஹரியானா விவசாயிகள் யாரும் சிங்கு , திக்ரி எல்லைகளில் போராடவில்லை” என அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி மாநில எல்லையில் கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகளே அதிக அளவில் போராடி வருகின்றனர். டெல்லிக்கு செல்லும் நெடுஞ்சாலைகளை மறிப்பது, ட்ராக்டர் பேரணி என அவ்வப்போது அதிரடியாகவும் போராடி வருகின்றனர்.