விரல் ரேகை பதிவாகாதவர்களுக்கு பொருட்கள் கொடுக்க ரேஷன் கடை ஊழியர்கள் மறுப்பு : ஆதார் மையங்களுக்கு சிக்கல்
ஒரே இந்தியா ஒரு ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழக ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி விரல் ரேகை பதிவுக்கு பிறகே ரேஷன்பொருட்கள் விநியோகிக்க வேண்டும். முதியோர், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் குடிமைபொருள் வழங்கல் வட்டாட்சியர்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள் அனுமதி பெற்று விரல் ரேகை பதிவின்றி பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கலாம் என்ற முறையில் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொரோன பரவல் காரணமாக கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை தொகுப்பு வழங்கியதால் கடந்த ஜூன் மாதம் வரை விரல் ரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்க அரசு அனுமதித்திருந்தது. மீண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் விரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என அரசு உத்திரவிட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 30 சதவீதத்திற்கு மேல் கடந்த மாதம் பிராக்ஸி முறையிலேயே பொருட்கள் விநியோகிக்கப்பட்டது இதனால் பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கிய விற்பனையாளர்களுக்கு வழங்கல் பிரிவு அதிகாரிகள் ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
இதனால் இந்த மாதம் விரல் ரேகை பதிவாகதவர்களுக்கு பொருட்கள் கொடுக்க ரேஷன் கடை ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் விரல் ரேகையை மீண்டும் பதிவு செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஆதார் மையங்களுக்கு மக்கள் அலைந்து வருகின்றனர்.
ரேஷன் பொருள் வாங்குவதற்காக விரல்ரேகையை மீண்டும் பதிவு செய்வதற்காக தினமும் 200 க்கும் மேற்பட்டோர் ஆதார்மையத்திற்கு வருவதால் ஆதார் மையம் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறது . இது குறித்து ரேசன் பொருள் வழங்கல் அதிகாரி கூறும் போது, ரேசன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இயந்திரம் 2 ஜி சிம் பயன்பாடு தான் உள்ளது. இதனால் மாவட்டத்தில் கூடுதலாக பிரச்சனை உள்ளதுதமிழகத்தில் பெரு நகரங்களில் 4 ஜி சிம் வழங்கப்பட்டுள்ளதால் அங்கு கைரேகை பதிவு பிரச்சனைகள் குறைவு என்று கூறினார்.