போலி நாணயத்தாள்களுடன் மூவர் வசமாக சிக்கினார்கள்!
போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் மூவர் சீதுவ, லியனகேமுல்ல, வீரகுல அங்கம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று விசேட பொலிஸ் அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லியனகேமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து சோதனைக்குட்படுத்தியபோது அவர்களிடமிருந்து போலி 500 ரூபா நாணயத்தாள்கள் 60 கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக வீரகல பிரதேசத்திலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து மேற்கொண்ட சோதனையின்போது போலி 500 ரூபா நாணயத்தாள்கள் 540 கைப்பற்றப்பட்டுள்ளன.
21, 43, 45 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு குழுவாக இருந்தே இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மூவரிடமிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.