`தலிபன்களை அலறவிடும் கோராசன் பயங்கரவாதிகளின் பின்னணி என்ன?
ஷரியத் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த இரண்டு அமைப்புகளும் சித்தாந்த ரீதியாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும், போர்க்களத்தில் பகையாளிகளாகவே இருக்கின்றன.
மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் முழுமையாகத் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதை அடுத்து, உயிர் பயத்தில் அங்கிருந்து வெளியேற ஆப்கன் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். `யாரையும் துன்புறுத்த மாட்டோம். பெண்கள் ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக இயங்கலாம். யாரையும் பழிவாங்க மாட்டோம். அனைவருடனும் நட்புடன் பழகவே விரும்புகிறோம்!’ என்று தாலிபன் தரப்பில் தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கும் போதிலும், அவர்களின் முந்தைய ஆட்சியில் நடந்த கோரச் சம்பவங்கள் ஆப்கன் மக்களின் மனதில் பதிந்துவிட்டதால், அப்கனிலிருந்து வெளியேறி பிற நாடுகளுக்குத் தஞ்சமடைய அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அதன் காரணமாக, தலைநகர் காபூல் விமானநிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படுகிறது.
தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்கு ஆப்கானிஸ்தான் முழுமையாகச் சென்றுவிட்ட நிலையில், அமெரிக்கா தங்கள் மக்களையும், படைகளையும் அங்கிருந்து மீட்கும் பொருட்டு காபூல் விமானநிலையத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா, ரஷ்யா எனப் பல்வேறு உலக நாடுகளும் தங்கள் மக்களை ஆப்கனிலிருந்து மீட்டு வருகின்றன. அதேபோல், தங்களை தாலிபன்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய ஆப்கன் அரசு தங்களை நிர்கதியாகக் கைவிட்டுவிட்ட நிலையில், ஆப்கனிலிருந்து அந்நாட்டின் பூர்வகுடிகள் பிற நாடுகளில் அகதிகளைப் போலத் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கின்றனர். ஆப்கன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருவதை விரும்பாத தாலிபன்கள் ஆரம்பத்தில் விமானநிலைய வளாகத்தில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மக்களைக் கலைத்தனர்.
பின்னர், அமெரிக்கப் படைகள் விமான நிலையத்தில் குவிந்ததால் வெளியேறிச் செல்பவர்கள் செல்லட்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்னும் ஓரிரு நாள்களில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேற உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் காபூல் விமானநிலையத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்தன. காபூல் விமானநிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் முதற்கட்ட விசாரணையில் தற்கொலைப்படை தாக்குதல் என்பது தெரியவந்தது.
தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்ட காபூலில் வெடித்த தொடர் வெடிகுண்டுகள் தங்கள் குடிமக்களை மீட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளை கடும் கொதிப்பில் ஆழ்த்தின. கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறிய அந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியிருக்கிறது. உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 28 பேர் தாலிபன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சியோர் ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்கப் படைகள் முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது தாலிபன்கள் இல்லையென்றால் வேறு யார்..? என்று அனைவரது மனதிலும் எழுந்த கேள்விக்குத் தாமாக முன்வந்து பொறுப்பேற்று பதிலளித்திருக்கிறது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.கே (Islamic State in Khorasan Province / ISIS-Khorasan) மத கொள்கைகளின் அடிப்படையில் தாலிபன் அமைப்பிற்கு இணையான ஐ.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காபூலில் ஏன் தாக்குதல் நடத்தி, தாலிபன்களையே கொன்று குவித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு, முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பின் பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும்!
ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பு
ஒட்டுமொத்த உலகமும் பரபரத்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.கே’ (Islamic State in Khorasan Province / ISIS-Khorasan) என்ற வார்த்தை நம்மில் பலருக்கும் புதிதாக இருக்கலாம். உலகளவில் இயங்கிக்கொண்டிருக்கும் பயங்கரவாத அமைப்புகளில் ஐ.எஸ் அமைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை மையமாகக்கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பின் லட்சியமும், நோக்கமும் இஸ்லாமிய நாடுகளில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஆள வேண்டும் என்பதே ஆகும். 2000-த்தின் தொடக்கத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த இந்த பயங்கரவாத அமைப்பு, மேற்காசிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் தங்கள் அமைப்பை வலுவாகக் கட்டமைக்க விரும்பியது.
ஆனால், 1994-ல் உருவாகி ஆப்கனில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாலிபன் அமைப்பு, ஐ.எஸ் அமைப்பு ஆப்கனில் காலூன்றத் தடையாக இருந்தது. 1996-ல் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றிய தாலிபன்கள் பின்னாளில், அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டனர். அந்த நேரத்தில், அமெரிக்கா ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஆப்கன் அரசின் மீது அதிருப்தியிலிருந்த ஜிகாதிகள் மற்றும் தாலிபன் அமைப்பிலிருந்து வெளியேறியவர்களை ஒன்று திரட்டி ஐ.எஸ் அமைப்பு ஆப்கானிஸ்தானில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.கே’ (ஐ.எஸ் கோராசன்) என்ற தனது கிளை அமைப்பை உருவாக்கியது. ஈரான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளை உள்ளடக்கியதுதான் கோராசன் மாகாணம் என்று ஐ.எஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஈராக் மற்றும் சிரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெற்று அதன் கிளை அமைப்பாக ஆப்கனில் பயிற்சி பெற்று வந்தது. 2015-ல் தான் தொடங்கப்பட்டது என்றாலும் இன்றைய தேதியில் ஆப்கானிஸ்தானின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக இந்த அமைப்பு அறியப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ்.கே – தாலிபன்; பங்காளிகளா? பகையாளிகளா?!
ஆயுத வன்முறை, உயிர்பலி என இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு ஈவு இரக்கமின்றி இயங்கும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பிற்கும் தாலிபன் அமைப்பிற்கும் துளியும் வித்தியாசமில்லை. இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுமே அடிப்படைவாதத்தைப் பின்பற்றுபவைதான். ஷரியத் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த இரண்டு அமைப்புகளும் சித்தாந்த ரீதியாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும், போர்க்களத்தில் பகையாளிகளாகவே இருக்கின்றன. `சன்னி’ இஸ்லாமியக் குழுக்களாக மதக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் ஒரே நிலைப்பாட்டுடன் பயணிக்கும் ஐ.எஸ் கோராசன் அமைப்பும் – தாலிபன் அமைப்பும், அதிகாரப் போட்டியில் நேரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை முதன்மை வேலையாக வைத்திருக்கும் ஐ.எஸ் கோராசன் அமைப்பு, அமெரிக்கப் படைகளால் பின்னடைவைச் சந்தித்து தாலிபனிலிருந்து வெளியேறியவர்களையும், ஜிகாதிகளையும் இணைத்துக் கொண்டு தன்னை வலுப்படுத்திக் கொண்டது. தாலிபன்களை விடவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அதீத தீவிரம் காட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பு பள்ளிக்கூடம் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவது, மருத்துவமனையில் புகுந்து தாக்கிக் கொலை செய்வது போன்றவற்றைச் செய்துள்ளது.
சர்வதேச அளவில் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாகத் திகழும் ஐ.எஸ் அமைப்பு, ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபனின் அதிகார அடக்குமுறைக்கு அடங்கிப் போவதா? என்ற அதிகாரப்போட்டியின் காரணமாகவே மத கொள்கைகளைத் தாண்டியும் களத்தில் தாலிபனிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.கே பயங்கரவாத அமைப்பில், 2015-ல் தொடங்கப்பட்டு தீவிரம் அடைந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் இணைந்தனர். பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐ.எஸ் கோராசன் அமைப்பையும், தாலிபன் அமைப்பையும் ஒரே கோட்டில் ஒருங்கிணைப்பது ஆப்கனின் கொரில்லா நெட்வொர்க்கான ‘ஹக்கானி’ தான் என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் கோராசன் அமைப்பு தொடங்கப்பட்ட பின்பு சில காலம் இரு அமைப்புகளிடையே எந்த மோதலும் இல்லாமல் இருந்து வந்தாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலக நாடுகளுடன் தாங்கள் அமைதிப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்புவதாகவும், ஜிகாத்தையும், போர்க்களத்தையும் கைவிடத் தயாராக இருப்பதாகவும் தாலிபன்கள் சர்வதேச நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் கூறியது, ஐ.எஸ் கோராசன் அமைப்பினரைக் கொதிப்பில் ஆழ்த்தியது.
அதற்குப் பின்னரே, தாலிபன் – ஐ.எஸ் கோராசன் இடையே இடைவெளி அதிகரித்தது. இப்படியாக இருக்க, தற்போது ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்டதை அடுத்து தாலிபன்களை போலவே, ஐ.எஸ் கோராசன் அமைப்பினரும் ஆப்கனின் வீதிகளில் ஆயுதங்களுடன் மனித வேட்டைக்குக் களமிறங்கியிருக்கின்றனர். தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் காபூல் நகரத்தில் நுழைந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் அளவுக்கு கோராசன் பயங்கரவாத அமைப்பினர் முன்னேறியிருப்பது எப்படி என்பது விந்தையாகவே இருக்கிறது. அதேபோல், தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படைகள் தனது தாக்குதலைத் தொடங்கியிருப்பதால், தாலிபன் தலைமையிலான அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
சே. பாலாஜி