தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்.
இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து தாம் விலகுவதாக புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மஹவௌ – கொஸ்வாடிய சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளின் போது, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு, நாத்தாண்டியா பிரதேச சபையின் பொதுஜன முன்னணி உறுப்பினர் ஒருவரால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, தாம் குறித்த பணிகளில் இருந்து விலகுவதாக புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திலங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது பிரதேச அரசியல்வாதி ஒருவரால் அந்த பகுதி கிராம உத்தியோகத்தர் பலவந்தமாக அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஒழுங்கமைப்பாளர் குறித்த கிராம உத்தியோகத்தர் ஆவார்.
அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசியல்வாதிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை.
தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் தடுப்பூசியினை பெற்றுக்கொடுப்பதற்காக, அரசியல்வாதிகள் இவ்வாறு கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர்.
எனவே புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து தமது தரப்பினர் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக புத்தளம் மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திலங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.