யாழ்ப்பாணத்தில் மிக உச்ச நிலையை அடைந்துள்ள கொரோனா : முடக்கப்பட்டுள்ள 3 கிராமசேவகர் பிரிவுகள்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.

அதன்படி வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவும் , மருதங்கேணிப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/432, J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலர் கூறியிருக்கின்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மிக உச்ச நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 395 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன் தொற்றால் 9 பேர் உயிரிழந்தனர்.

யாழ். மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட அன்டிஜென், பி.சி.ஆர். பரிசோதனைகளில், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 61 பேர், கரவெட்டி மருத் துவ அதிகாரி பிரிவில் 48 பேர், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 40 பேர், சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 38 பேர், கோப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 37 பேர், தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவில் 35 பேர், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேர், உடுவில் மருத் துவ அதிகாரி பிரிவில் 28 பேர் இனங்காணப்பட்டனர். நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 17 பேர், பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 13 பேர், ஊர்காவற்றுறை மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேர், வேலணை மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேர், காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர், மருதங்கேணி மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் நேற்றிரவு வெளியான யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூட அறிக்கையின்படி, யாழ். போதனா மருத்துவமனையில் 8 பேரும் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 5 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேரும் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளில் தலா இருவர் வீதம் மொத்தமாக 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் கைதடி முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் நேற்றிரவு வரை இதுவரை 12 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். சங்கானையைச் சேர்ந்த 74 வயது ஆண், 46 வயது பெண், வரணியைச் சேர்ந்த 98 வயது பெண், தெல்லிப்பழையை சேர்ந்த 81 வயது பெண், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயது ஆண், அல்வாயைச் சேர்ந்த 47 வயது பெண், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 85 வயது பெண், யாழ். மாநகரைச் சேர்ந்த 64 வயது ஆண், 47 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இதேவேளை கடந்த 2020 மார்ச் தொடக்கம் யாழ் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.