கொரோனா நோய்க்காவிகள் பொதுமக்களே : வடக்கு – கிழக்கு நிலைமை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

“வடக்கு – கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே. எனவே, பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் நடமாடாது இருந்தால் மட்டுமே இந்தத் தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும்.”
– இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள். இதன்போது வீதிச்சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம்.
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர். எனவே, இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் பொலிஸார் பல கேள்விகளைக் கேட்பர்.
எனவே, அற்கான ஒத்துழைப்பைப் பொலிஸாருக்கு வழங்கிச் செயற்படுமாறு வடக்கு – கிழக்கு மக்களைக் கோருகின்றேன்” – என்றார்.