ஓபிஎஸ் மனைவி மறைவு : முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆறுதல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பு காரணமாக காலமானார். மனைவியின் மறைவை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையிலேயே இருந்து வருகிறார். மருத்துவ நடைமுறைகளை முடித்து விட்டு, விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
ஓபிஎஸ் மனைவியின் மறைவையடுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை புறக்கணித்து விட்டு, பெருங்குடியில் உள்ள ஹெம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதேபோல, கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்னர்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள், மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இல்லத்துணையைப் பிரிந்து வாடும் அண்ணன் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
வாழ்க்கைத்துணையை இழந்து பெருந்துயருற்றுள்ள ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயை இழந்து வாடும் தம்பிகள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தங்கை கவிதா ஆகியோருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன், என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக முன்னாள் முதலமைச்சரும்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர், கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அம்மையார் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்வில் இன்பம், துன்பம் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் பக்க பலமாகவும், உற்ற துணையாகவும் இருந்து வந்தவர். அவரின் மறைவு அவர்களது குடும்பத்தினருக்கு எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
எதையும் தாங்கும் வல்லமை கொண்ட அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த கடினமான சூழ்நிலையையும் மிக விரைவில் கடந்து வரவும், அம்மையாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து துயரில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து துயரில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.