மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு எரிவாயு தகனமேடை.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாகவாவது ஒரு மையப்பகுதியில் கொரோனா உடலங்களை எரிப்பதற்கான எரிவாயு தகனமேடை அமைந்தால் உடலங்களை எரிப்பதற்கு சிரமம் இல்லாமல் இலகுவாக இருக்கும். இதனை அமைப்பதற்கு தனவந்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் வைத்து (31) பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலங்களை எரிப்பதற்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பில் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில் :
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் மற்றும் இறப்பும் அதிகரித்து வருகின்றது. இதுவரை 18 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
இறந்தவர்களின் உடலங்களை தகனம் செய்வதற்காக வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிவாயு தகனமேடைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை வவுனியாவிற்கு கொண்டு சென்றுதான் எரிபதற்குரிய ஏற்பாடுகளை சுகாதார திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயினால் இறக்கின்றவர்களை வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடையில்தான் எரிக்கின்றமை வழக்கம். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து எடுத்துச்செல்லும் போது வீணான செலவுகளும் அங்கும் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
ஒரேநேரத்தில் அதிகளவில் உடலங்கள் செல்வதால் அதிக நேரங்கள் செலவாகின்றன. இந்நிலைலையினை போக்குவதற்காக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களை ஒருங்கிணைந்ததாக ஏதாவது ஒரு மையமாக அல்லது பகுதியாக மாங்குளம் போன்ற பிரதேசங்களில் எரிக்கும் இயந்திரங்கள் அமையும் பட்சத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரித்துக்கொள்ளமுடியும்.
எனவே நலன் விரும்பிகள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் இதற்கு முன்வந்து செயற்படுத்தும் பட்சத்தில் எரிக்கும் உடலங்களை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.