முதல் டி20 ஆட்டத்தை 7விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது வங்கதேச அணி.
வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. முதல் டி20 ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே அறிமுக வீரர் ரச்சின் ரவிந்திரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முதல் ஆறு ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து. பிறகு 10 ஓவர்கள் வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் 40 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. பேட்டிங்குக்கு மிகவும் சவாலாக அமைந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி, 16.5 ஓவர்களில் 60 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் டாம் லதம், ஹென்றி நிகோல்ஸ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 18 ரன்கள் எடுத்தார்கள். முஸ்தாபிசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று, ஆஸ்திரேலியாவை 62 ரன்களுக்குச் சுருட்டியது வங்கதேச அணி. அதேபோல இன்று, நியூசிலாந்து அணியை 60 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2014-ல் இலங்கைக்கு எதிராக இதே 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
வங்கதேச அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் எடுத்தது. 10 ஓவரின் முடிவில் 37/3 என்கிற நிலையில் இருந்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 4 ஓவர்களில் 1 விக்கெட்டுடன் 7 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பாகப் பந்துவீசினார். இதன்பிறகு 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டி20 ஆட்டத்தை வங்கதேச அணி வென்றது.
முஷ்பிஃகுர் ரஹிம் 16, மஹ்முதுல்லா 14 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்துள்ளது.
2-வது டி20 ஆட்டம் வெள்ளியன்று நடைபெறவுள்ளது.