ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில்,பயணம் செய்த கடற்படை வீரர்கள் 5 பேர் பலி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகருக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை இந்த போர்க் கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எம்.எச்.60 எஸ் ரக ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உள்பட கடற்படை வீரர்கள் 6 பேர் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ரேடார் பார்வையிலிருந்தும் அந்த ஹெலிகாப்டர் மறைந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. கடற்படைக்கு சொந்தமான ஏராளமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன.
இதனிடையே மாயமான கடற்படை ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கடலோர காவல் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த கடற்படை வீரர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் இறங்கினர். அப்போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் கடற்படை வீரர் ஒருவர் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை மீட்பு குழுவினர் கண்டனர்.
உடனடியாக அவரை மீட்டு ஹெலிகாப்டரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளையில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மற்ற கடற்படை வீரர்கள் 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. இருந்தபோதிலும் மீட்புக்குழுவினர் முழு நம்பிக்கையுடன் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.