தமிழகத்தில் புதிய கார்களை தற்போது பதிவு செய்ய முடியாத சிக்கல் நிலை!
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் தமிழகத்தில் புதிய கார்களை பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிதாக கார்கள் விற்கப்படும் போது, பம்பர் டூ பம்பர் அடிப்படையில் காப்பீட்டு பாலிசி எடுப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி ஓட்டுனர், பயணி, வாகன உரிமையாளர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு எடுக்க வேண்டும் என்ற உத்தரவை காப்பீட்டு நிறுவனங்களுக்கும், போக்குவரத்து துறைக்கும் அனுப்பவும் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று வாங்கப்பட்ட புதிய கார்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த காப்பீட்டு நிறுவனத்திடமும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதற்கான பேக்கேஜ் இல்லை என்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தினரிடம் கேட்டபோது, செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு வாங்கப்பட்ட கார்களை மட்டும் பதிவு செய்வதாகவும் புதன்கிழமை முதல் வாங்கப்பட்ட கார்களை பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் புதிய கார்களை தற்போது பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.