இந்திய மக்களுக்கு கூகுள் விடுத்த விளக்கம்!
கூகுளில் உலகளவில் சர்ச்சைக்குரிய கன்டென்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. இதைப்பற்றி உலகளவில் தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருவதால், அந்த கன்டென்டுகளை நீக்க கூகுள் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகள் மே 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த விதிகளை ஏற்க முதலில் தயக்கம் தெரிவித்த கூகுள் நிறுவனம், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய தொழில்நுட்ப விதிகளுக்கு சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து, புதிய தொழில்நுட்ப விதிகளின்படி யூசர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதந்தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிட வேண்டும். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் ஜூலை மாதத்தில் எடுத்த நடவடிக்கைகளின் தரவுகளை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.
அதில், யூசர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் தனியுரிமை, காப்புரிமை, நீதிமன்ற உத்தரவு, சட்டம் மற்றும் அவதூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 95,680 விதிமீறல் கன்டென்டுகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 83613, மே மாதத்தில் 71132, ஏப்ரலில் 59350 கன்டென்டுகள் விதிமீறல் புகார்களின் அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில் நீக்கப்பட்ட கன்டென்டுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இவைதவிர, கூகுளின் தனியுரிமை கொள்கைக்கு முரணாக பதிவேற்றப்பட்டிருந்த 5,76,892 கன்டென்டுகளையும் கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து கூகுள் கொடுத்துள்ள விளக்கத்தில், இந்திய யூசர்களிடமிருந்து 36,934 புகார்கள் பெறப்பட்டதாகவும், அதனடிப்படையில் 95,680 கன்டென்டுகளை நீக்கியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டின் டிஜிட்டல் தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்குட்பட்டு கூகுள் நடவடிக்கை எடுப்பதாகவும், கன்டென்டுகளை நீக்கும்போது அதனை கவனமாக பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.