பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசின் நடவடிக்கைகள் உதவாது ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு.

அரசின் நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அவசர சட்டங்களின் மூலம் அரசின் செலவைக் குறைப்பதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தைக் குறைப்பதும் நெருக்கடி நிலையைச் சமாளிக்க உதவாது.
அரசின் செலவுகளைக் குறைப்பதற்கான திட்டத்தை நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள நிலையில், அது வெற்றியளிக்காது.
மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் வரும் அரச ஊழியர்களின் சம்பளங்களைக் குறைக்க நிதி அமைச்சர் முயற்சிக்கின்றாரா?
எனினும், அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு ஆட்சியிலுள்ள அரசே முழுப் பொறுப்பு” – என்றார்.