பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி பிரகடனம்.

பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் துறைமுகங்கள் அதிகார சபை நிறைவேற்ற வேண்டிய அனைத்து சேவைகள், பெட்ரோலிய உற்பத்தி, திரவ வாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் விநியோகம், ரயில்​வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து பொது போக்குவரத்து சேவைகள், பொது சேவைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவுகள் ஆகியன அத்தியவாசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட களப்பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் சேவைகளும் அத்தியாவசிய சேவைகளுக்குள் அடங்குகின்றன.

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள் , காப்புறுதி சேவைகள், சுகாதார சேவையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், சதொச மற்றும் கூட்டுறவு துறைகளுடன் தொடர்புடைய சேவைகளையும் ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.

இதனைத் தவிர, மாகாண சபைகளின் கீழ் இயங்கும் அரச அலுவலகங்களால் நிறைவேற்றப்படுகின்ற சேவைகள் மற்றும் தபால் சேவையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கான தேவையான உணவு கையிருப்பு அரசாங்கத்திடம் உள்ளதாகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபமீட்டும் நோக்கில் நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிரான இந்த முயற்சியை முறியடிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் தொடர்பிலான சரத்துக்களை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் அமுல்படுத்தியதாகவும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் கூறியுள்ளார்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை கைப்பற்றி, நியாயமான விலையில் விநியோகிப்பதற்காக சதொச உள்ளிட்ட அரச நிறுவனங்களிடம் கையளித்தன் மூலம் செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சியை முறியடிக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.