முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்ணான்டோ 119 ஓட்டங்களையும், சரித் அசலங்க 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர். இதனையடுத்து, 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கட்டுகளை கைப்பற்றினார். அதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.