மணல் தோண்டும் போது 1,200 ஆண்டுகள் பழமையான தெய்வீக சிலை கண்டறியப்பட்டுள்ளது – ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்காம் (Budgam)மாவட்டத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான துர்கா தேவியின் கற்சிலையை அம்மாநிலத்தின் உள்ளூர் போலீசார் மீட்டுள்ளனர். இந்த மிக பழமையான துர்கா தேவி சிலை புட்காம் மாவட்டத்தின் கான் சாஹிப் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஆற்றுப் படுகையில் இருந்து சில தொழிலாளர்கள் மணல் எடுக்கும் பானையில் ஈடுபட்டிருந்த போது இந்த சாமி சிலை கண்டறியப்பட்டது. இந்த தகவலை சமீபத்தில் அம்மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பழமையான தெய்வீக சிலை கண்டறியப்பட்டுள்ளது பற்றிய தகவல்களை போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஜீலம் ஆற்றுப் படுகையில் சில தொழிலாளர்கள் மணலை தோண்டி கொண்டிருந்த போது அவர்களுக்கு ஏதோ தட்டுப்பட்டுள்ளது. எனவே கவனமாக தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பழங்கால சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த சிலையை சேதமடையாமல் முழுமையாக தோண்டி எடுத்துள்ளனர் தொழிலாளர்கள். வெளியே எடுத்து பார்த்த போது அது பழமையான துர்கா தேவியின் சிலையாக இருந்தது.

இதனை தொடர்ந்து அங்கு மணல் அள்ளும் பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக புட்காமில் உள்ள உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருங்கல்லால் செய்யப்பட்ட பழமையான துர்கா தேவி சிலையை மேற்பார்வையிட்ட பிறகு, ஜம்மு -காஷ்மீர் அரசின் காப்பகங்கள், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறைக்கு (Archaeology and Museums department) தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் அந்த பழங்கால கற்சிலையை சோதித்த போது மீட்கப்பட்ட துர்கா தேவியின் கற்சிற்பம் ஏறக்குறைய 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அதாவது தோராயமாக சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த தொன்மையான சிலை தொல்லியல் துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

12 அங்குலங்கள் 8 அங்குலங்கள் (24 செ.மீ. 20 செ.மீ.) அளவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்த துர்கா தேவி இந்த சிற்பம், சிங்க சிம்மாசனத்தில் துர்கா தேவி அமர்ந்திருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. மாநில காப்பகங்கள், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை துணை இயக்குனர் முஷ்டாக் அகமதுவிடம் மூத்த காவல் கண்காணிப்பாளர் தாஹிர் சலீம் கான் இந்த சிற்பத்தை முறையாக ஒப்படைத்ததாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று ஸ்ரீநகரின் பாந்த்ரேதன் (Pandthrethan) பகுதியில் உள்ள ஜீலம் நதியில் இருந்து மணல் எடுக்கும் போது தொழிலாளர்களால் மீட்டெடுக்கப்பட்ட இந்த பழங்கால சிலை மீட்பு விவகாரத்தில் இதுவரை யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதை பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன் உஜ்ஜயினியில் உள்ள மகாகலேஸ்வர் கோவில் வளாகத்தில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டு காலகட்டத்திலான சிவலிங்கம் மற்றும் கிட்டத்தட்ட அதே காலத்திற்கு முந்தைய விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.