கடந்த 24மணி நேரத்தில் 199 கொவிட் தொற்றாளர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 199 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதிற்க்கு மேற்பட்ட 275000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதுடன் அதன் மூலம் 94 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் இரண்டாவது கட்ட தடுப்பூசியானது 200,000பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட 68 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தொற்றுக்கு உள்ளானவர்கள் பத்துக்கு மேற்பட்ட தொற்று அடையாளம் காணப்பட்ட சுகாதார பிரிவுகளாக வெல்லாவெளி சுகாதார பிரிவில் 64 நபர்களும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 41 நபர்களும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 24 நபர்களும் செங்கலடி சுகாதார பிரிவில் 15 நபர்களும் ஆரையம்பதி சுகாதார பிரிவில் 13 பேரும் வவுணதீவு சுகாதார பிரிவில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தில் 2400 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதுடன், ஓகஸ்ட் மாதத்தில் 7959 தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். இது 3 மடங்கு அதிகரிப்பை காட்டுகின்றது.
கடந்த வாரத்தில் 1601 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 230 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது டெல்டா வேறியன்ட் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதால் தொற்று வேகமும் மரணம் வீதமும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது எனவே மக்களாகிய நீங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 6 கட்டிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அடுத்ததாக தற்போது மூன்றாவது அதி தீவிர சிகிச்சைப் பிரிவு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக தொற்று நோயாளர்களுக்காக பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழைச்சேனையில் இதுபோன்ற இன்னும் சில வாரங்களுக்குள் புதிய 8 கட்டில்களுடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளது.
தடுப்பூசியினை பொறுத்த வரையில் முதலாவது தடுப்பூசி 275000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 94 வீதமாக வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தடுப்பூசி 200000 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 68 வீதமான 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு இன்னமும் 70ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது முற்றாக வழங்குவதற்கு, அத்துடன் தற்பொழுது 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.