அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை எதிா்த்து ப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் தொடா்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை எதிா்த்து ஃப்ளிப்காா்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் தொடா்ந்த வழக்கில் 12 ஆண்டுகளாக அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மூன்று வாரத்திற்குள் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைக்கு எதிராகவும், ஒரு சில நிபந்தனைக்கு இணங்காமலும், சில ஃப்ளிப்காா்ட் குழும நிறுவனங்களின் ரூ.10,600 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு வழங்கியது தொடா்பாக, முன்னணி இ-காமா்ஸ் நிறுவனமான ஃப்ளிப்காா்ட்டின் முன்னாள் இணை நிறுவனா் சச்சின் பன்சால் மற்றும் ஒரு சிலருக்கு எதிராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத்துறை அனுப்பிய இந்த நோட்டீசை எதிா்த்து ஃப்ளிப்காா்ட்டின் சச்சின் பன்சால், சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
இம்மனுவில் சம்பந்தப்பட்ட பரிவா்த்தனைகள் 12 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்றது. இந்த பரிவா்த்தனைகள் தொடா்பாகவும், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாகவும் தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்பரிவா்த்தனைகள் தொடா்பாக ஏற்கனவே பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 12 ஆண்டுகள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பியிருப்பது காலதாமதமானது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி, ஃப்ளிப்காா்ட் மற்றும் அதன் குழு நிறுவனங்களை வால் மாா்ட் வாங்கியது. நிறுவனத்துடன் தற்போது எனக்கு எவ்வித தொடா்பும் இல்லை. இப்பரிவா்த்தனைகள் தொடா்பான ஆவண ஆதாரங்களை தற்போது திரட்டுவது என்பது சாத்தியமற்றது.
எனவே அமலாக்கத்துறையின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தாா்.
இம்மனு நீதிபதி ஆா்.மகாதேவன் முன்பு வெள்ளிக்கிழமை(செப்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 12 ஆண்டுகளாக கூறப்படும் விதிமீறல் மீது அதிகாரிகள் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, மூன்று வாரங்களுக்குள் அமலாக்கத்துறை இவ்விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.