4 பிரதான அரிசி ஆலைகளில் சோதனை…
பொலன்னறுவயில் அமைந்துள்ள பிரதான அரிசி ஆலைகள் 04, நேற்றைய தினம் (03), அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல அவர்களினால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நிபுன, அரலிய, லக் சஹல் மற்றும் நிவ் ரத்ன ஆகிய அரிசி ஆலைகளே, இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன், குறித்த ஆலைகளில் காணப்படும் அரசி தொடர்பான அறிக்கையொன்றை, நுகர்வோர் விவகார அதிகார சபைக்குப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களால் விநியோகிக்கப்படும் அரிசித் தொகை மற்றும் மொத்த விலைகள் தொடர்பான அறிக்கையொன்று, நுகர்வோர் விவகார அதிகார சபைக்குப் பெற்றுக்கொடுக்கவும் அதன் பின்னர், அந்த விலைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, தங்களிடமுள்ள நெல் தொகையை அரிசியாக்கவும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும், இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.