தனிமைப்படுத்தல் விதி மீறல்: ஒரே நாளில் 1,083 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் 1,083 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று காலை வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலேயே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகத் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்றும் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக நேற்று 1,083 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 191 வாகனங்களும் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 66 ஆயிரத்து 730 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்கள் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாண எல்லையைக் கடக்க முற்பட்ட 568 வாகனங்களில் பயணித்த 1,054 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மேல்மாகாணத்தின் 13 நுழைவாயில்களிலின் ஊடாக மேல்மாகாணத்தினுள் நுழைய முற்பட்ட 684 வாகனங்களில் பயணித்த 1,220 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” – என்றார்.